Friday, June 15, 2012

இரட்டையர்கள் II


இரட்டையர்களில் ஒருவரை அடித்தால் மற்றொருவருக்கும் அதே இடத்தில் வலிக்கும் என்பது ஒரு திரைப்பட அணு விஞ்ஞானம் அனால் உண்மையில் இருவருக்கும் இடையே சுவாரசியமான சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் உள்ளது

மனிதனின் குணாதிசயத்தை தீர்மானிப்பது பிறப்பா அல்லது வளர்ப்பா (Nature or Nurture) என்பது ஒரு மாபெரும் விஞ்ஞான விவாதம். அறிவியலர்கள் இரு பிரிவாக நின்று பிறப்பினாலேன்றும், வளர்பினாலேன்றும் விவாதிட்டனர். இமானுவேல் காண்ட், பிரான்சிஸ் கால்டன், நவம் சாம்ஸ்கி ஆகியோர் பிறப்பிக்கும், ஜான் லாக், பாவ்லாவ், சிக்மண்ட் ப்ராய்டு வளர்பிர்க்கும் வாதிட்டனர். மேலும் குழப்பத்தை அதிகப்படுத்தாமல், ஜீன் பற்றிய விளக்கமான ஆராய்ச்சியை (எனக்கு தெரியாததால்) விட்டுவிட்டு இரட்டைக் குழந்தைகளிடம் நான் கவனித்ததை இங்கு சொல்கிறேன்

வார்த்தைகளின் உச்சரிப்ப்பு - உதாரணமாக சைக்கிள் என்பதை "சீச்சி" என்று எனது இரு குழந்தைகளும் உச்சரிப்பார்கள் இது ஒருவன் சொல்வதை மற்றொருவன் கேட்பதால்தான் என்று சொல்லிவிட முடியாது ஏனெனில் இதே வார்த்தையை மற்றொரு குழந்தை நிச்சயம் வேறுமாதிரிதான் உச்சரிக்கும். இதேபோல் ஏறக்குறைய அனைத்து வார்த்தைகளையும் இருவரும் ஒரே மாதிரி உச்சரிப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் தங்களுக்குள் நிறைய பேசிக்கொள்வார்கள் எங்களுக்கு புரியாமல் (என்னை அடிப்பதற்கான திட்டமாக கூட இருக்கலாம்)

பழக்கவழக்கங்கள் மற்றும் அசைவுகள் - இருவரும் ஒரே மாதிரி கால்களை மடக்கி அமர்வார்கள் ஒருவரை மற்றொருவர் பார்பதனால் என சொல்ல முடியாது ஏனெனில் அவர்கள் தூங்கும் பொது அருகில் இருக்கும் என்னிடம் தங்கள் முதுகை அணைத்து தூங்குவதே இருவரின் வழக்கம் நிச்சயம் அவர்களது உள்ளுணர்வு ஒரே எண்ணத்துடன் செயல்படுகிறது என இதன் மூலம் நம்பலாம்.

விருப்பங்கள் - குழந்தைகள் அனைவரும் பொதுவாக இனிப்புகளை விரும்பி உண்பார்கள். முதலவனும் அப்படியே அனால் இளையவன் பொதுவாக பழம் மற்றும் வழவழப்பான பொருட்களை தின்பதில்லை. விளையாட காரும், கரடியும் கேட்கின்றனர் மாற்றி வாங்கிகொடுத்தால் வர்மக் கலையை பயன்படுத்துகிறார்கள். விருப்பங்கள் வேறுபடுகின்றன

சிந்தனைகள் - சொல்வதை கேட்க முயலும் மற்றும் கேட்காமல் அடம் பிடிக்கும் வேறுபட்ட வழக்கம் உண்டு. இறுதியல் ஒரே மாதிரி PERFORM-செய்தாலும் இருவரின் செய் முறைகள் பெரிதும் வேறுபடுகின்றன உதாரணமாக படிப்பது, வேலை செய்வது......ஆகியவற்றில் வேறுமாதிரி சிந்திக்கிறார்கள்.

அடிப்பது - வேறு வேறு STYLE- ல் அடித்தாலும் ஒரே அளவு மற்றும் அடிக்கும் நோக்கத்தை கொண்டிருக்கிறார்கள் (யாருங்க அது இதெல்லாம் VALID POINT இல்லைன்னு சொல்றது)

அடிப்படையான சில ஒற்றுமைகள் இருந்தாலும் பின்னாட்களில் வளரும் போது அவர்களது விருப்பம், தேர்தெடுக்கும் பாதை மற்றும் செயல்படும் களம் ஆகியவை இருவரின் அடையாளங்களை வேறுபடுத்தி காட்டுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென நான் கருதுகிறேன். வேறுபாடுகள் வேலையில், உடையில், உணவில், இருப்பிடத்தில் இருக்கப்போவதில் எனக்கு ஆட்சேபனை எதுவுமில்லை. உள்ளத்தில் மட்டும் வேண்டாம் என்பது என் ஆசை

பள்ளியில் குழந்தைகளை சேர்பதற்கென என் ஆராய்ச்சியை தொடங்கினேன். அரசு பள்ளியில் படித்ததனால் அரசு பள்ளியில் சேர்ப்பதுதான் சரி என்பது என் எண்ணம். "School - சேத்தரதுக்கு எதுக்கு ஆராய்ச்சி" தீப்பெட்டி வாங்குவதற்கே ஆராய்ச்சி செய்யும் மனோ வியாதி எனக்குள்ளதை அறிந்தும் என் மனைவி என்னை சபித்தாள். இன்பமாக சாபத்தை ஏற்று ஆராய்ச்சியை துவங்கினேன்அரசு பள்ளிகளிலும், தனியார் Matriculation பள்ளிகளிலும் சமச்சீர், CBSE, ICSE, IGCSE, IB, Montessori என பல்வேறு பாடத்திட்டங்கள், ஒவ்வொன்றுக்கும் அதனுடைய நன்மை, தீமைகள், அனைத்தையும் பட்டியலிட இந்த முறை வெள்ளை நிற உடையில் வந்து என் மனசாட்சி என்னை ஏகமாய் திட்டியது.

ஆசிரியர் ஒருவருடன் பேசும்போது, அவர் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் அறிவுடன் விளங்குவது, அங்கு நல்ல முறையில் பாடம் நடத்தப்படுவதால் அல்ல என்றும், அங்குள்ள மாணவர்கள் தாங்களாகவே படிக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்வதனாலேயே என்றும் கூறினார். ஆம் பாடம் நல்ல முறையில் கற்பிக்கப்படுவதைவிட, மாணவர்கள் தாங்களாகவே கற்றுக்கொள்ளும் அறிவை பெற்றால் அது மேன்மையானதாக இருக்கும். இன்று உள்ள பல தனியார் கல்வி நிறுவனங்கள் சிறந்த முறையில் கற்பிக்கின்றன அனால் தானாக கற்றுக்கொள்ளும் அறிவை அத்தகைய மாணவர்கள் இழக்கிறார்கள். பின்னாட்களில் சுயமாக எதையும் கற்க சிரமப்படுகிறார்கள். எதையும் சுயமாகவும், தாய்மொழியிலும் கற்பதே அழமாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமையும்.

சுயமாக சிந்திக்கும் அறிவே, கொசு அடிப்பதில் ஆரம்பித்து, ஓட்டை விழுந்த ஒசோனை சரிசெய்வதுவரை நம்மை தேவையானவாறு செயல்படவைக்கும். அறிவியல் முன்னேறியே இந்த காலத்தில் அதை பயன்படுத்தி எந்தவிதமான தீங்கும் விளைவிக்காத கண்டுபிடிப்புகளை நிகழ்த்த நாம் தடுமாற, இந்த வசதிகள் எதுவும் இல்லாத பழங்காலத்தில் அறிய கண்டுபிடிப்புகளை நம் முன்னோர்கள் நிகழ்த்தியது இதனால்தான். கல்வி என்பது இதுதானென்று விவேகானந்தரும் விவரிக்கிறார்


பள்ளி பற்றிய என் ஆராய்ச்சி இன்னும் முழுமை அடையவில்லை.........(ஆராய்ச்சி முடியறதுக்குள்ள பையன் பெருசாயிட்டா என்ன பண்றது?)

எனக்கு மங்கலாக ஞாபகம் இருக்கிறது, எனது சிறு வயதில், 90- தாண்டிய என் பாட்டி தினமும் குறைந்தது 10 முறையாவது "எல்லாம் கலி காலம் கலி காலம்" என்பார். நியூட்டன் நேரில் வந்து சொன்னாதான் நம்புவேன் என்று அடம்பிடிப்பேன். அனால் இப்போது, குடிக்க மோர் தந்த நாட்டில் போலியாக சுத்திகரிக்கப்பட்ட கட்டண நீர், ஆன்மிகம் அருள வேண்டிய தமிழ் ஆதீனம் கன்னடத்தில் சட்டப்படி ஜாமீன் கோருகிறார் பால் வழக்கிற்கு அல்ல பாலியல் வழக்கிற்கு, 5-ஆம் வகுப்பு படிப்பதற்கு கல்விக்கட்டணம் செலுத்தமுடியாமல் படிப்பை பாதியில் கைவிடும் மாணவன், அவன் பார்க்கும் கிரிக்கெட்- ஆடும் கிரிக்கெட் வீரரும், அவரை விலைக்கு வாங்கிய நடிகரும் சில ஆயிரம் கோடிகளை சம்பாதித்தவுடன், அந்த 5-ஆம் வகுப்பு கூட படிக்காத அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டமும், பாரத ரத்னா பரிந்துரையும், இது போதாதென்று சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கணக்கில் உள்ள அனைத்து பணமும் கருப்பு பணம் என்று கூறி விட முடியாது என மத்திய நிதியமைச்சர், இனிமேல் ஜனநாயக தேர்தல் என்பதை சொந்த செலவில் சூனியம் என மாற்றிக்கொள்ளலாம். "எல்லாம் கலி காலம் கலி காலம்" 


புவன் - யுவனுக்காக 

முனுசாமி 


(அடுத்து: வாழ்க்கை #1 \ 22-06-2012) 
தங்களின் கருத்துக்களை Comments-ல் இடவும். (கேள்விகள் வரவேற்கப்படுகின்றன)

Wednesday, June 6, 2012

இரட்டையர்கள்

நம்மை சுற்றிலும் பல அதிசயங்களும், உண்மைகளும் உலகில் பரவிக்கிடக்கின்றது, அனால் அதை பார்பதற்கு நாம் நம் பார்வையை சீர்படுத்திக்கொள்ள வேண்டும்.
- விவேகானந்தர்

இதை படிக்கும் கண்களுக்கும், கணினி திரைக்கும் நடுவே, பார்வைக்கு புலப்படாத பல ஆச்சர்யங்களை இயற்கை ஒளித்து வைத்துள்ளது. மொபைல்-பேச Electromagnetic waves, சுவாசத்திற்காக Oxygen, தாவரங்களுக்காக Carbon-di- oxide, Dettol Soap விளம்பரத்திற்காக கிருமிகள் மற்றும் பல. பல நோபல் பரிசுகளுக்கு பிறகு ஒருவழியாக மனிதன் தன்னையும், தன்னை சுற்றியுள்ள தன் உப அவையங்களையும் ஓரளவு தெரிந்து கொண்டான். 21500 ஒளியாண்டுகளுக்கு அப்பால் பூகோள அறிவும், டீ போடும் மெசின் (மனைவியல்ல) அளவு வசதிகளும் விரிவடைந்தது. அனால் அதே விகிதத்தில் மனிதனின் மனம் சுருங்கி விட்டது, பெற்ற தாயை SUV-ல் Drop செய்கிறான், முதியோர் இல்லத்தில்.


சற்றே கடந்த தலைமுறையில், அனைத்து வீடுகளிலும், வசதி குறைந்தபோதிலும், திண்ணையும், அதில் நடந்த-களைப்பாற அமர்பவர்களுக்கு குடிநீரும் எப்போதும் உண்டு. இன்று வீட்டு வாசல்களில், ஜெர்மானிய தொழில் நுட்பத்தில் இயங்கும் வாகனமும், உதவிகேட்க வருபவர்களை துரத்த (விடுமுறை எடுத்தால் வருமானம் குறையும் என்பதால் மனைவியை கவனிக்க முடியாமல் அவரை இழந்த) காவலாளியும். தன் வசதிக்காக மற்றொரு உயிரை மறைமுகமாய் கொல்லும், உயர்நிலையை மனிதன் அடைந்துதான் விட்டான்.

தலைப்புக்கு வருவோம்


இரண்டு மணி நேர போராட்டதிக்கு பிறகு வில்லன் ஹீரோவை கட்டிவைக்க, திடீரென கூரையை பிய்த்துக்கொண்டு ஹீரோவைபோல மற்றொருவர் குதிக்க, வில்லன் மிரட்சியாய் பார்க்க. அனேகமாக இரட்டை பிறவிகளை அதிகமாக பயன்படுத்தியவர்கள் நம் சினிமாகாரர்களாகத்தான் இருப்பார்கள். அனால் உண்மையில் இது ஒரு இயற்கையின் Sophisticated விளையாட்டு.

உயிரினங்களை பொதுவாக பாலூட்டிகள் மற்றும் முட்டையிடுவன என இருவகையாக பிரிக்கலாம். இந்த இரு பிரிவிற்கும் பிறக்கும் குட்டிகளின் எண்ணிக்கை, அவற்றின் நிலைப்புத்தன்மை, ஆயுள், சார்பின்மை, சுற்றுப்புறத்தில் அதன் தாக்கம் உட்பட பல்வேறு காரணங்களால், இயற்கையாகவே தீர்மானிக்கப்படுகிறது. குறைந்த ஆயுள் கொண்ட ஈசல்கள் அதிகமாகவும், அதிகமான ஆயுள் கொண்ட, அதிக அளவில் முட்டையிடப்பட்டாலும், தப்பி பிழைப்பதில் குறைவாக ஆமைகளும், இயற்கை ஏதோவொரு வகைப்பாட்டை பின்பற்றுகிறது. மனிதனால் இந்த கணக்கை புரிந்து கொண்ட அளவு அதை மாற்ற முடியவில்லை. ஆம் இவ்வகையான மரபு சம்பந்தமான மாற்றங்கள் நிகழ பல நூறு ஆண்டுகள் தேவைப்படுவதால், அரை நூற்றாண்டு மனிதனால் அதை மேற்கொள்ள முடியாமல் போகிறது.

சுவிஸ் வங்கி நிறுவனர், அவரை விட பணக்காரரான நம்மூர் அரசியல்வாதி, அவரிடம் வேலை பார்க்கும் நம் பக்கத்து வீட்டுக்காரர், பதிவை எழுதுபவர், அதை படித்து விட்டு திட்டுபவர் - அனைவரும் முடிவில் செல்லும் இடம் மட்டுமல்ல, நாம் உருவான இடமும் ஒன்றே. பலோபியன் TUBE-ல், அம்மா மற்றும் அப்பாவிடமிருந்து 23 + 23 குரோமோசோம்களை வாங்கி, உருவான நாம் அடுத்த சில நாட்கள் வளர்ந்து, தாயின் கருவறையை அடைகிறோம். அதன் பின் படிப்படியாக வளர்ந்து உடலின் அனைத்து பாகங்களைப்பெற்று, முழுதாய் உருவேடுக்கிறோம். இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நாட்களில், சில அணுக்களிலிருந்து, பல அணுக்களாக பெருகும் போது, சில சமயம், இரு அல்லது சில அணுக்கூட்டங்களாக பிரிவு ஏற்படுகின்றது. இந்த அணுக்கூட்டங்கள் தனித்தனியே வளர்ந்து உருவேடுப்பதே, ஒரே பிரசவத்தின் போது இரண்டு, மூன்று, சில சமயம், தினத்தந்தியை எட்டும் அளவிற்கு குழந்தைகள் பிறக்க காரணமாக அமைகிறது. இதில் அடிப்படையான செல்களை ஒரே தொகுப்பில் இருந்து பெறுவதால், இவை பார்பதற்கு ஒரே மாதிரியாக Identical Twins - ஆக இருக்கக்கூடும். மேலும் இந்த அணுக்கூட்டங்கள் சரிவர பிரியாமல் வளர்ந்தால், அவை குழந்தைகள் ஒட்டிப்பிறக்க காரணமாகிறது. சில சமயம் இரு அணுக்கள், இரு முட்டைகளுடன் சேர்ந்து உருவானால் அவை இரண்டும் தனித்தனி குணாதிசயங்களுடன் Non-Identical Twins - ஆக அமைய ஏதுவாகிறது. (For more information: http://en.wikipedia.org/wiki/Pregnancy and http://www.in-gender.com/XYU/Conception/default.aspx)

இரட்டை குழந்தைகளில் ஒருவரை அடித்தால் மற்றொருவருக்கும் அதே இடத்தில் வலிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

நேற்று இரவு 9 மணியளவில் நண்பருடன் பைக்கில் செல்லும்போது, சிக்னலைத்தாண்டி மித வேகத்தில் வாகனங்கள் நகர்ந்தது. எனக்கு முன்னால் சென்ற வெளியூர் பேருந்திலிருந்து, ஒரு பிரபல வெளிநாட்டு நிறுவனத்தின் குளிர்பான (மிராண்டா-னு சொல்லக்கூடாது) வெற்று பிளாஸ்டிக் பாட்டில், ஜன்னல் வழியே வந்து சாலையில் நடுவில் விழுந்தது. நான் சுதாரித்து வாகனத்தை நிறுத்தவும், பாட்டில் மீது ஏறாமல் செல்லவும் முயற்சிக்க, முடிவில் பாட்டில் வெற்றி பெற்றது. நானும், நண்பரும், என்னைப்போல் 2.5 மடங்கு பாரம் கொண்ட எனது வண்டியும், சாலையின் நடுவே இந்திய பங்குச்சந்தை போல் படுத்துக்கிடந்தோம். நல்ல வேளையாய் பின்னால் வந்த கனரக சரக்கு வாகனம் பொறுமையாக நின்று, அமைதியாக எங்களை வேடிக்கை பார்த்தது. சுற்றியிருந்தவர்களில் பெருமனது படைத்த சில பேர் உதவியுடன் அடுத்த சில நிமிடங்களில் சாலையின் ஓரத்தில் எங்களை சரிபடுத்திக்கொண்டோம். சுமார் 7 பேர், மொத்தமாக 20 தடவை "நல்ல வேளை பின்னால் வண்டி எதும் வரல" என்று கீழே சாய்ந்ததை செய்தித்தாளளவு விபத்தாக்க. பயந்து போய் சுமத்ரா நடுக்கம் கொண்ட எனது நண்பரை சமாதானம் செய்து கொண்டு, அங்கிருந்து கிளம்பினோம். உதவிய அனைவருக்கும் நன்றி. அதேபோல் இதுபோன்ற சம்பவங்களில் அடிபட்டவர்களை, "ஒண்ணுமில்லை" என சமாதானம் சொல்லி மருத்துவமனைக்கு அனுப்புவதே சிறந்தது. பயமுறுத்த வேண்டாம். வேடிக்கை பார்த்து இடையூறு செய்ய வேண்டாம். தவறான ஆலோசனை வேண்டாம்.

மேலும் பிகருடன் பயணம் செய்யும் குடிமகன்கள், துணையை குளிர்விக்க குளிர்பானம் வாங்குவதில் தவறில்லை அனால், நாம் சூட்டை தணிக்க மற்றவரை பலியிடக்கூடாது. உடலுக்கு எந்த நன்மையையும் செய்யாத மாறாக தீமை செய்யும், நம் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளி வெளிநாட்டின் GDP-யை உயர்த்தும், நம் நாட்டின் நீர் வளங்களை நாசப்படுத்தும் - இந்த குளிர்பானங்களை குடிக்காமல் தவிர்ப்பது நல்லது. பிளாஸ்டிக் பாட்டில்கள் நாட்டின் அனைத்து வளங்களையும் கெடுப்பதுடன், நம் சந்ததிகளின் வாழ்வாதரங்களை கேள்விக்குறியாக்குகின்றன.

1.தேவையான அளவு குடித்துவிட்டு, காலி பாட்டில்களை கண்டபடி வீசுவது.
2.அளவாக குடித்து, பாட்டில்களை குப்பையில் போடுவது.
3.தவிர்க்க முடியாத தருணங்களை தவிர மற்ற நேரங்களில் குடித்து, Recycle - குப்பையாக மாநகராச்சியிடம் தருவது.
4.குடிக்காமல் இருப்பது.
5.குடிப்பவர்களை குடிக்க விடாமல் உயிரை வாங்குவது.
இதில் 5 - தெய்வம், 3 - மனிதன், 1 - குரங்.... (விலங்குகள் மன்னிக்கவும்). மற்ற எண்களுக்கான பலன்களை Linear Interpolate செய்யவும்.

புவன் - யுவனுக்காக
முனுசாமி

(அடுத்து: இரட்டையர்கள் தொடரும்\15-06-2012)
தங்களின் கருத்துக்களை Comments-ல் இடவும். (கேள்விகள் வரவேற்கப்படுகின்றன)

Monday, May 28, 2012

கல்வி பற்றி விவேகானந்தர்


நண்பர் ஒருவர் தனது வலையில் மாணவர்களை படி படி என துன்புறுத்தும் பெற்றோர்களையும், படிப்பதற்காக அறிவுரை கூறும் (என்னைபோன்ற) ஆட்களையும் கிழி கிழி என கிழித்திருந்தார். என் பெற்றோரும் என்னை படிக்கச்சொல்லி வற்புறுத்தியது கிடையாது (அவருக்கும்). கிழிக்கப்பட்டாலும் அவரது கருத்துக்களை நான் அமோதிக்கிறேன். அனால் நல்ல விதிகளை (Principles) செயல்படுத்துவது சில சமயம் தவறாகிவிடும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் ஒருவருக்கு அந்த முடிவை எடுக்குமளவிற்கு முதிர்ச்சியும், பக்குவமும், அறிவும் இருப்பது அவசியம். தன் வாழ்கையைப் பற்றி முடிவெடுக்கும் உரிமை நிச்சயம் ஒருவருக்கு உண்டு அனால் அது அவர்களுக்கு நன்மை பயக்குமா என்பதும் தீமையாக அமைந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்குமா என்பதும் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று. குறிப்பாக, கல்லூரி படிப்பு, வாழ்க்கைத் துணை, எதிர்காலம் மற்றும் குழந்தைகள், முதலிய வாழ்கையை தீர்மானிக்கும் முடிவுகள் ஒருவரால் சாதாரணமாக எடுக்கப்படும்போது, அவை அவர்கள் மீது அக்கறை கொண்டவர்களுக்கு கலக்கத்தையே உண்டு பண்ணும். எந்த ஒரு முடிவினையும் எடுக்கும் திறமையும், அதன் விளைவுகளை எதிர் கொள்ளும் மனோதிடமும் தன்னிடம் இருப்பதை ஒருவர் தன் மேல் அக்கறை உள்ள ஒருவருக்கு நிருபிப்பதும், புரியவைப்பதும் அவரது கடமையாக அல்லாமல் அவர்களது அக்கறைக்கு இவர்கள் காட்டும் மதிப்பாக இருக்க வேண்டும்.



பிரபல திரைப்படம் ஒன்றில் மாணவர் ஒருவர் தன் விருப்பத்திற்கேட்ப படித்தது போலவும், அதனால் அவர் உயர்ந்தது போலவும் காண்பிக்கப்பட்டார், மேலோட்டமாக நன்று. அனால் படத்தில் எங்கும் அவர் படிப்பது போல் காட்டப்படாததும், முடிவில் அனைவரை விடவும் பணக்காரராக அவர் ஆக்கப்பட்டதும் - படிக்காதது: அது யாராலும் விரும்பப்படாததாலும், பணக்காரராக ஆக்கப்பட்டது: அது அனைவராலும் விரும்பப்படுவதாலும் என்பது அடிப்படையில் தவறானது ஆகும். முடிவில் அந்த மாணவர் அதிகமாக பணம் சேர்க்காத, ஓட்டு வீட்டில் இருக்கும் ஒரு சாதாரண மனிதனாக, தனது அறிவை அனைவருக்கும் கற்பிக்கும் ஆசிரியனாக காட்ட முடியாதது நம் சமூகத்தின் தோல்வியே.

இனி தலைப்புக்கு வருவோம்

கல்வி என்பது ஒருவன் தன் மனதை (Concentration) எந்தவொரு பொருளின் மீதும், தேவைப்படும் பொழுது செலுத்துவதும் (ஒருங்கிணைப்பதும்), தேவைப்படும் பொழுது அகற்றுவதுமேயாகும். வெறும் தகவல்களை சேகரிப்பது கல்வி அன்று.
விவேகானந்தர்

உதாரணமாக, தன் மனதை ஆளத்தெரிந்தவனுக்கு, ஐ பி எல் சீசனிலும் செமஸ்டர் எழுத முடியும், அழகான பெண் மறைக்கும் போதும் பேருந்தில் திருக்குறள் படிக்க முடியும். இது கல்வி மட்டும் அல்ல, உண்மையில் இதுதான் வாழ்கை. அந்த காலத்தில் மின் விளக்கு இல்லாதபோதும் மேதைகள் உருவானதும், இன்று A/C class room-ல் மாணவர்கள் Depression-க்கு உள்ளாவதும் இதனால்தான். நமது கல்வி இதை கற்பிக்காத போதுதான், உயர்ந்த மதிப்பெண் எடுத்த ஒருவனால் வாழ்வில் முன்னேற்றம் காண முடியாமல் போகிறது. இங்கு முன்னேற்றம் என்பது பணம் அல்ல. இன்று நாம் அதிகமாக பணம் சம்பாதிக்கிறோம் அனால் அதற்கு விலையாக ஆரோக்யத்தை, நிம்மதியை, வாழ்வின் அர்த்தத்தை கொடுத்து வருகிறோம்.

நம்மை சுற்றிலும் பல அதிசயங்களும், உண்மைகளும் உலகில் பரவிக்கிடக்கின்றது, அனால் அதை பார்பதற்கு நாம் நம் பார்வையை சீர்படுத்திக்கொள்ள வேண்டும்.
விவேகானந்தர்


அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளையும் விவேகானந்தர் அவை இவ்வுலகில் ஏற்கனவே இருந்ததாகவும், அதை கூர்ந்து நோக்கிய கவனம் அறிவியலர்களிடம் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். இந்த கவனமும், பார்வையும் தான் நியூட்டனை ஆப்பிள் மூலமும், கலிலியோவை நட்சத்திரம் மூலமும், ஆர்ய பட்டாவை கணிதம் மூலமும் தலை சிறக்க வைத்தது. இன்று நாம் நோய்களை பெருக்கி, நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு நோபல் கொடுத்து, அறிவை போற்றுகின்றோம்.


விவேகானந்தரின் வாழ்வியல் கோட்பாடுகள், இந்த வலைப்பூ போல் சுவாரசியம் இல்லாமல் இருப்பதாலோ என்னவோ, வாழ்வியலை உலகுக்கு சிறப்பாக போதித்த அவரை, இந்த வேகமான வாழ்கையில் மறந்து விட்டோம்.

இன்று நாம் அனைவரும் வேகமாகவும், தீர்க்கமாகவும் போய்கொண்டிருக்கிறோம், அனால் போகும் பாதை சரியானதுதானா?

புவன் - யுவனுக்காக
முனுசாமி

(அடுத்து: இரட்டையர்கள்\04-06-2012)
தங்களின் கருத்துக்களை Comments-ல் இடவும். (கேள்விகள் வரவேற்கப்படுகின்றன)